கடந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது - இந்த தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு - ஜனாதிபதி தெரிவிப்பு

 


1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று ஜே.வி.பி கூறுமானால், தமது பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர வேண்டும்.


நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர். 


கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது.


2024 ஜனாதிபதித் தேர்தல், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இறுதி வாய்ப்பு.


- 'புழுவன் பெரலிய' (புரட்சி செய்வோம்) நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு


நாட்டின் தற்போதைய நிலைக்கு தம்மைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்றும், 1987 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி ஜே.வி.பி மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 


சாத்தியமில்லாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றும் தவறை ஜே.வி.பி மீண்டும் செய்து வருவதாகவும் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத குழுவிடம் நாட்டின் எதிர்காலத்தைக் கையளிக்க முடியுமா என்றும் ஜனாதிபதி வினவினார். 


Stables@ParkStreet இல் நேற்று (12) நடைபெற்ற 'புழுவன் பெரலிய' (புரட்சி செய்வோம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். 


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், கொழும்பைச் சேர்ந்த பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இங்கு இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.


இதன்போது யுவதியொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, நாடு மீண்டும் ஒரு போராட்ட நிலைக்குத் தள்ளப்பட்டால் எதிர்கொள்ள வேண்டிவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது சாத்தியமற்றது என்றும், நாட்டை மீட்பதற்கான இறுதி வாய்ப்பாகவே 2024 ஜனாதிபதி தேர்தல் அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். 


இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க;


இந்தத் தேர்தல் எனது எதிர்காலத்தை அன்றி உங்கள் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். அரசாங்க அதிகாரத்தை  ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எவரும் தயாராக இருக்கவில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கு அற்றுப்போகும் நிலை உருவாகியது. அந்த நிலை நீடித்திருந்தால் நாமும் பங்களாதேஷின் நிலையைக் கண்டிருப்போம். 


அந்த பொறுப்பை ஏற்காமல் மற்றைய தலைவர்கள் ஓடினாலும். மக்களுக்காக நான் அந்தப் பணிகளை ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதற்காகவே VAT வரியை அதிகரித்தோம். அதனை செய்திருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.


அதனால் ரூபாயின் பெறுமதியை நிலைப்படுத்தி பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடிந்தது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இருப்பின் எமது செயற்பாடுகள் இன்று மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளன. நாம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். பொருளாதாரம் இன்னும் வலுவடையவில்லை. பொருளாதார முன்னேற்றத்துக்கான ஒப்பந்தங்களுக்கமைய நாம் செயற்படத் தவறினால் இன்றிருக்கும் நிலைத்தன்மை மீண்டு சரிவடையலாம். 


வலுவான பொருளாதாரத்தை உருவாக்க 5-10 ஆண்டுகள் ஆகும். அதற்காகத் திட்டமிட்டு செயற்படுகிறோம். எதிர்கால சந்ததியினருக்காக நாம் வலுவான, நவீன, போட்டி நிறைந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாட்டுக்கான எனது நோக்கமும் அதுவேயாகும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சரியான பொருளாதாரக் கொள்கை இல்லை.


தேசிய மக்கள் சக்தியும் மக்களிடம் பொய் சொல்கிறது. பொருளாதாரக் கொள்கை என்ன என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அவர்கள் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கொண்டுச் செல்வார்களா இறக்குமதியில் தங்கியிருப்பார்களா என்று கேட்டேன். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அர்த்தமுள்ள விவாதத்திற்கு வழிவகுக்கும் வகையில் அவரைப் பதிலளிக்குமாறு கேட்டேன். ஆனால் அவர் அதிலிருந்து நழுவிச் செல்கிறார். 


நாட்டின் தற்போதைய நிலைக்கு தமது கட்சிகளைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் காரணம் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். 1987 கலவரத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்கள். அது உண்மையெனில் தங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது வழக்குத் தொடர வேண்டும்.


இன்று நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை மீண்டும் ஏமாற்றுகின்றனர். உண்மையை ஒருபோதும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தங்களின் கடந்த காலத் தவறுகளை ஒப்புக் கொள்ளாதவர்கள் மீது எவ்வாறு எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைப்பது?


இன்று மாற்றம் என்று கூறிக்கொண்டு மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டுகின்றனர். அவர்கள் கூறும் மாற்றம் என்னவென அவர்களுக்கே தெரியாது. அவர்களை நம்பி எப்படி வாக்களிப்பது?


திசைக்காட்டி 232 பக்கங்களைக் கொண்ட விஞ்ஞாபனத்தை முன்மொழிந்திருக்கிறது. அதனை வாசிக்கும்போது ஐந்து முறை தூக்கம் வந்துவிட்டது. புதியது என்று அதற்குள் ஒன்றுமில்லை. அதனால் 2025 வரவு செலவு திட்ட யோசனை குறித்து அவர்களிடம் கேட்க வேண்டியுள்ளது. 


ஊழல் தடுப்புச் சட்டத்தின் துணையுடன் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளத் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கின்றனர். ஆனால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க அது போதுமானதல்ல. அதற்கு மேலதிக ஏற்பாடுகள் தேவைப்படும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. 


நாட்டில் ஏற்றுமதி அடிப்படையிலான, டிஜிட்டல், பசுமை, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது நோக்கம். அதன் கீழ் விவசாய நவீனமயமாக்கல், கிராமப்புறங்களில் வறுமை குறைப்பு, சுற்றுலா ஊக்குவிப்பு, முதலீட்டு வலயங்கள் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்.


ஊழலுக்கு எதிரான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஜனசபா முறைமைக்குள் பெண்கள் இளைஞரின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். தேர்தல் முறைமையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், அரசியல் கட்சிகளின் பொறுப்புகள், முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் ஆணைக்குழுவின் 87 பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஒன்றுபடுத்தினால் புதிய நாட்டைக் கட்டமைக்கலாம். 


இன்றும் அனுரவும் சஜித்தும் பொருத்தமற்ற மாற்றம் பற்றி பேசுகிறார்கள். இந்த நாட்டின் தேவைகள் அவர்களுக்குப் புரியவில்லை. மற்ற அனைவரும் தோற்றுவிட்டதாகவும், தாம் மட்டுமே வென்றிருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளனர். மக்கள் தமது எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இல்லை.


இதுதான் அவர்களின் வழமையான பாரம்பரிய அரசியல். அவர்கள் புதிதாக எதையும் செய்யப்போவதில்லை. எதிர்காலத்தை அத்தகைய குழுவிடம் ஒப்படைக்க முடியாது. எனவே எதிர்காலத்திற்குத் தகுந்த வழியை நான் காட்டியிருக்கிறேன். எனவே செப்டம்பர் 21 எனது வேலைத்திட்டத்தை பலப்படுத்த வாக்களியுங்கள்." என்றார். 


தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க;


கொழும்பில் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் 100 சதுர அடிக்குள் வாழ்கின்றனர். பல குடும்பங்கள் ஒரே நிலத்தை பகிர்ந்து கொண்டு நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்கின்றன.


இந்த நிலைமை இலங்கையின் அபிவிருத்திக்கான தேவையையும், எமது தலைநகரின் வலுவான பொருளாதாரத்தின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. நாட்டில் குறிப்பிடத்தக்க வளம் இருந்தபோதிலும், நாம் இன்னும் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. கடந்த 76 ஆண்டுகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் தேவைக்கேற்ப நமது பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவர் தனிப்பட்ட இலாபத்திற்காகப் பதவிக்கு வரவில்லை. குறைந்தபட்ச வருமானம் ஈட்டினாலும் வரி மறுசீரமைப்பு போன்ற கடினமான மறுசீரமைப்புக்கள் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்தினார். 


பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் விரிவான மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளோம். பொருளாதார வளர்ச்சி மட்டுமே வரிச்சுமையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.


உலகச் சந்தையில் நமது தயாரிப்புகளுக்கு போட்டித்தன்மையை உருவாக்கும் வகையில் தாய்லாந்து போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறோம். எனினும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார். அத்தகைய ஒப்பந்தங்கள் இல்லாமல் நாம் எப்படி பொருளாதாரத்தை வளர்க்க முடியும் என்பது கேள்விக்குறியாகும். தொழில் வாய்ப்புக்கள் எவ்வாறு உருவாகும், வௌிநாட்டு வருமானத்தை எவ்வாறு ஈட்டுவது என்பதும் கேள்விக்குறியாக மாறும். 


இந்நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பொருளாதார அபிவிருத்தியே சிறந்த வழியாகும். அதற்காக புதிய சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் நடைமுறையில் இருப்பதால், நாங்கள் சரியான திசையில் செல்கிறோம்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயத் திட்டங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நன்மைகளைக் கொண்டு வருவதுடன் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய வளமான நாட்டையும் உருவாக்கும்."


இந்த நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் ஜனாதிபதி வழங்கிய பதில்களும் வருமாறு;


கேள்வி:  இந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களால் வெற்றி பெற முடியுமா?

பதில்: ஆம், அதனால்தான் போட்டியிடுகிறேன்.


கேள்வி: ஐக்கிய மக்கள் சக்தி அல்லது தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால், அடுத்த சில மாதங்களில் நாம் என்ன எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மீண்டும் எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் இருக்குமா? IMF மீண்டும் எங்களுக்கு உதவுமா?

பதில்: அவர்கள் வெல்லப்போவதில்லை. ஆனால் நாம் இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான நிலையான ஒப்பந்தத்திற்கு அமையவே செயற்பட வேண்டியுள்ளது. அவ்வாறு முடியாதென நினைத்தால் நாம் கடுமையான நெருக்கடியில் சிக்குவோம். ஒரு டொலருக்கு சுமார் 500 ரூபாய் வரையில் செலுத்த நேரிடும். மேலும் இவர்களின் முரண்பாடான கொள்கைகளால் சர்வதேச நாணய நிதியம் திட்டத்தில் இருந்து விலகினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அதுவே அவர்களால் செய்ய முடிந்த சாதனையாகும்.  கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஏதாவது பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தால், சஜித் பிரேமதாசவும் சில இலவச திட்டங்களை அறிவிக்கிறார். அவ்வாறு இருவேறு திட்டங்களின் கீழ் வரவு செலவை முகாமைத்துவம் செய்ய முடியாது. 


கேள்வி: நாட்டில் ஒரு அரசியல் அலை உருவாகியே கோட்டாபயவின் கைகளுக்கு ஆட்சி சென்றது. அவரின் காலத்தில் சரிவடைந்த பொருளாதாரத்தை நீங்கள் மீட்டெடுத்த பின்பு மற்றுமொரு அரசியல் அலை வருகிறது. அனுரவிற்கோ சஜித்துக்கோ ஆட்சி சென்று மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் சென்றால் நீங்கள் நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? 

பதில்: இல்லை. இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் யாராவது சீரழித்தால் அதனை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இதுவே எங்களின் கடைசி வாய்ப்பு. அந்த வாய்ப்பை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


ஊடகப் பிரிவு

Ranil24 - ரணிலால் முடியும்

2024-09-13




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/oZUanku
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!