அனுரகுமார வெற்றிபெற்றால் வேறு கட்சியில் இருந்தே பிரதமர் நியமிக்க வேண்டி வரும் ; ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ
அனுரகுமார வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லை. அதனால் ஜே.வி.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவந்தால், அது தொடர்பான விசாரணை முடிவடையும் வரைக்கும் பராாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் அவர் எவ்வாறு தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாராவது ஒரு வேட்பாளர் எதி்ர்வரும் 21ஆம் திகதி வெற்றிபெற்றால், அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக்கிறது. அவ்வாறு அவர் பாராளுமன்றத்தை கலைத்தால் தற்காலிக அமைச்சரவை ஒன்றை அவர் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதிவரை பாராளுமன்றத்துக்கான காலம் இருப்பதால், அதுவரைக்கும் பாராளுமன்றத்தை அவ்வாறே கொண்டுசெல்லவும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு முடியும்.
அதேநேரம் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் அதிகமானவர்களின் விருப்பத்துக்குரியவர் என ஜனாதிபதி நினைக்கும் ஒருவரை பிரதமராக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஏனெனில் அடுத்த பாராளுமன்றம் வரைக்கும் நாட்டில் அமைச்சரை ஒன்று இருக்கவேண்டும்.
குறைந்தது 20 அமைச்சர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை கொண்டு செல்ல முடியும். அனுரகுமார வெற்றிபெற்றால், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. அதனால் வேறு கட்சிகளில் இருந்தாவது பிரதமர் ஒருவரை ஜனாதிபதிக்கு நியமிக்க வேண்டி ஏற்படுகிறது.
மேலும் இந்த தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ள நிலையில். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அவரை பதவி நீக்கவும் முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு குற்றப்பிரேணை கையளிக்கப்பட்டு, அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், அதன் பின்னர் குற்றப்பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைக்கும் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்றார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/OilwCMt
via Kalasam
Comments
Post a Comment