காத்தான்குடி பள்ளிவாசல் மீண்டும் மூடல்!


கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்ட காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசல், மீண்டும் மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கப்பட்டது.

அதேவேளை, 11 அமைப்புக்கள் நாட்டில் செயற்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 2021.04.10ஆம் திகதி விதிக்கப்பட்ட தடைப் பட்டியலில் காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசலும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனினும், இப்பள்ளிவாசலை மக்கள் பாவனைக்காக வழங்குமாறு நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் வேண்டுகோளிற்கமைய இப்பள்ளிவாசலை திறப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி திறக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலை வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே திறக்க அனுமதிக்கப்பட்டதாக இப்பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.

மீண்டும் இப்பள்ளிவாசல் செப்டம்பர் 13ஆம் திகதி திறக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து காத்தான்குடி பிரதேசத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் பாதுகாப்பு தரப்பினருடன் இப்பள்ளிவாசலை எல்லா நாட்களும் திறப்பது தொடர்பில் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2021.04.13ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/3 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக மூடப்பட்ட இப்பள்ளிவாசலை முழு நாளும் மீண்டும் திறப்பதாக இருந்தால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட வேண்டும் என்ற விடயம் இதன்போது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை சேகரிக்கும் நோக்கிலேயே மூடப்பட்ட காத்தான்குடி ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் திறக்கப்பட்ட விடயம் தற்போது தெரிய வந்துள்ளது.

எனினும், இப்பள்ளிவாசலை திறப்பதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.

இதனையடுத்தே 11 பேரைக் கொண்ட நிர்வாக சபையும் இப்பள்ளிவாசலுக்காக வக்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளிவாசலை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எமது திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த குறித்த உயர் அதிகாரி விரைவில் பள்ளிவாசல் முழு நாளும் திறக்க அனுமதிக்கப்படும் என என நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, இப்பள்ளிவாசலை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னணியின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். சபீல் நளீமி தனது பேஸ்புகில் மேற்கொண்டுள்ள பதிவில் இப்பள்ளிவாயலை திறப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் அரசியல் நோக்கத்திற்காக ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே இந்தப் பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தோற்றவுடன் பள்ளிவாயல் மீண்டும் இழுத்து மூடப்பட்டிருக்கிறது என்ற செய்தி கவலையளிக்கிறது என சபீல் நளீமி மேலும் தெரிவித்துள்ளார். Rifthi ali




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1YkmKL8
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

Saudi envoy see off first batch of Hajj pilgrims to Makkah || இலங்கையின் முதல் ஹஜ் குழு புறப்பட்டது- வழியனுப்பிய சவூதி தூதுவர்