மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதி - பிர்தௌஸ் நளீமி தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எமது மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட தற்போது தேசிய மக்கள் சக்தி மீதான ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் பகுதிகளில் பிரதான அரசியல்வாதிகள் சிலர் போட்டியிடாத நிலையில் அவர்களது ஆதரவாளர்களும் தற்போது எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ் பிரதேசங்களிலும் பாரம்பரிய தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தேசிய மக்கள் சக்தியையே தமது தெரிவாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை இலகுவாகப் பெற்று ஒரு ஆசனத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இரண்டாவது ஆசனத்தையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
காத்தான்குடியின் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரவுக்கு வாக்களிக்காத மக்கள் தற்போது கைசேதப்படுகின்றனர். இனவாதமற்ற, நாட்டின் மீது தூய்மையான அன்பு கொண்ட ஒரு தலைவருக்கு வாக்களிக்காதுவிட்டோமே என அவர்கள் கவலைப்படுகின்றனர். அவ்வாறானவர்
நான் கடந்த பல வருடங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமயத் தலைவர்களோடு இணைந்து சகவாழ்வுக்காக பாடுபட்டு வருகின்றேன். அதன்மூலம் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத் தலைவர்களுக்கு மத்தியில் எனக்கு சிறந்த உறவு உள்ளது. அதனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபடுவேன்.
நமது அரசியல்வாதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதிலேயே கடந்த காலங்களில் கவனம் செலுத்தினர். மக்களாகிய நாமும் கட்டிடங்களை கட்டுவதும், வீதிகளை அபிவிருத்தி செய்வதுமே அரசியல்வாதிகளின் பணிகள் என நம்பி இருக்கின்றோம். என்னைப் பொறுத்த வரைக்கும் மனிதர்களை வளப்படுத்துவதே ஓர் அரசியல் தலைமைத்துவத்தின் பிரதான பணியாக இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். பன்மைத்துவத்துக்கு மதிப்பளித்து, அதன் பெறுமானத்தை விளங்கி, வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழ வேண்டிய ஒரு பண்பட்ட சமூகத்தை இந்த மாவட்டத்தில் உருவாக்கி, அத்தகைய ஒரு சமூகத்தை எமது எதிர்கால சந்ததிக்கு ஒப்படைக்க வேண்டும் என கனவு காண்கிறேன் என்றார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ngx8lKQ
via Kalasam
Comments
Post a Comment