சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்தே உடல்களை அடக்க அனுமதி கொடுத்தனர்! -ஓமல்பே சோபித தேரர்
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என்று அரசாங்கம் எந்நிலைப்பாட்டிலி ருந்து அறிவித்துள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுகிறது. உடல்களை புதைப்பதா, அல்லது தகம் செய்வதா என்ற விடயத்தில் இனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாட்டை அரசாங்கமே தோற்றுவித்தது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். எம்பிலிபிடிய பிரதேசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் முழுமையான தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது. ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை உறுதியாக பின்பற்றுதாக குறிப்பிட்டவர்கள் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. தேசப்பற்று, ஒரு நாடு ஒரு சட்டம் ஆகியவை அரசாங்கத்துக்கு வெறும் தேர்தல் கால பிரசாரம் என்பதை பெரும்பான்மை மக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ...